இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Wednesday, November 11, 2009

நிறங்களால் ஆதல்


கனவுகளின் எல்லையற்ற மொழியில்
என்னை அழைத்துக் கொள்ள வந்தாய்.

பிரித்துணர முடியாத நிறக்கலவைகளுக்குள்
பிரகாசமாய்ப் பத்திரப்படுத்திய உன்
புன்னகையுடனான நீ
இன்னும் கலைந்து விடாதபடியே
என் கண்கள் திறந்திருக்கின்றன.

பின்வரும் நாட்களில்
என்னையுரசி மொய்த்துக்கிடக்கும் நீதான்
எல்லையற்ற மொழியால்
கனவில் அழைத்தாயென
நீயற்ற ஒருவளிடம் எப்படிச் சொல்வேன்?

என் சொந்தக் கனவுகளில்
நீ குறுக்கிட்டதற்கான தண்டனையாய்
கனவுகளின் நிறத்திலிருந்து பிரித்து
உன்னையிங்கு இருக்கச் செய்துவிடலாம்.

06.10.2009

2005 - 2009உப தலைப்பு : 2005 - 2007

மீளமுடியாத நினைவுகள் என கூறிக் கொண்டு
முகம் முழுவதும் படர்ந்திருந்த
கண்ணீரின் தடித்த கோடுகளை
உன் கைகளாலே கலைத்து விட்டு
எழும்பிச் செல்கிறாய்.

''உடல் மொழிதல்களும் குறியீடுகளும்
அற்றிருந்த ஒரு வாழ்வாய்
உன்னுடனான பொழுதுகள்'' என்றேன்.

''இவ்வளவையும் எப்படி அடக்கிவைத்தாய்''யென
என்னை சுவாசித்துக் கொண்டே
உன் துல்லியமான கண்களை
என்னருகில் வைத்துக் கேட்கிறாய்.

மிக லாவகமாய்,உடலைத் துறந்து
சதைக்குவியல்களின் கூட்டிலிருந்து
எனக்கேயான அழகியலில் வெளியேறி
எல்லைகளெல்லாம் அழித்தொழித்து
உன் சுவாசிப்பிற்காய் நான்
வாழ்ந்து கொண்டிருக்கிறது.

உப தலைப்பு: 2007 -2009
வாழ்தலின் நாட்கள் ஓங்கியறையப்படுகின்றன.

ஒருவருக்காய் இருவரும்
இருவருக்கேயான ஒருவரினதும் சுவாசங்கள்
பச்சை பச்சையாய் பிய்க்கப்படுகின்றன.

என்னை சுவாசிப்பதால் நீ
வாழமுடியாது என்று கூறப்பட்டு
சுவாசங்கள் நிறுத்தப்படுகின்றன.

நீண்ட மௌனங்களுடனான கலவி.

பின்னெழும் அசதியில்
அமைதியாய் நாட்கள் ஊர்கின்றன நெடுந்தூரம்.

உபதலைப்பு : 2009
''சகல காரியங்களுக்கும்
பிறப்பு ஒரு முறைதான்மா''யென
உன் திருமதியடையாளங்களுடன்
sms வருகிறது.

20.09.2009

Tuesday, September 29, 2009

இசைக்குறிகளினால் அணைத்தல்

மௌனங்களினால் அலைக்கழிக்கப்படும் உனது
இரவுப்பொழுதின் இசைக்குறிகளினை
இரவிரவாக என்னிடம் நீ பாடிக்காண்பித்தாய்.

மனதின் ஓட்டங்களையெல்லாம் ஒதுக்கி
உனக்காக நீயே இவற்றினையெல்லாம் எழுதியதாய்
நேற்றைய மின்னஞ்சலில் நீ குறிப்பிட்டிருந்த போதும்
நீ வாசித்த இசைக்குறிகளில்
உனது வலிகளின் சுமைதாங்கிய எகிறல்
தூர்ந்து போய்க்கிடந்தது.

உன் வீட்டின் முன்னேயிரையும்
கடலின் அபூர்வம் தரும் இசைக்குள்
உன் தேகத்தின் சூடுகளினை இறக்கிவிடும் சந்தர்ப்பங்களில்
கலைந்து கிடக்கும் உன் இசைக்குறிகளை
பொருத்திப் பொருத்தி புதிய ராகங்களை எழுதுகிறாய்.

உன் சொற்களை அணைத்துக்கொள்ளும்
அனைத்துத் தருணங்களிலும்
நீ எழுதிக்கொள்ளும் ஒழுங்கற்ற இசைக்குறிகள்
என்னில் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து படர்ந்து
உனது கடலின் ஓவியம் வரைதலாகிறது.

15.07.2009

மர்ம விளையாட்டின் அலைச்சல்

அலட்சியமாய்
எதிலும் நிலையற்றுக் கிடக்கிறது மனம்.

புது மேலதீக சுமையாய்
எனதுடலே எனக்குப் பாரமாயிற்று.

வானம் பூமியெங்கும் வியாபித்திருந்த நான்
மிகப் பயங்கரமாய்
குறுந்தளத்தில் சுவாசத்திற்கென
ஓங்கியறையப்பட்ட பொழுதுகளின் பின்
எனதுடலே எனக்குப் பாரமாயிற்று.

மௌனமாய் நகர்ந்து போகும் இரவுகளில்
கொந்தளித்து தட்டுத்தடுமாறி
கடற்கரையோரமும் கோணாவத்தை அருகிலும்
வயலின் குளிர் காற்றிலும்
வெளிறிப்போய் அழகிழந்து கிடக்கிறது எனதுயிரும் உடலும்.

ஆழமாய் நான் போட்ட அனைத்துக் கோலங்களும்
இன்று அர்த்தமற்றுப் போயின.
எதிலும் நிலையற்றும் நிலைக்கமுடியாமலும்
அலைக்கழிந்து கிடக்கிறது என் மனம்.

என் பற்றிய இறைவனின் ரகசியம்
இன்னமும் தெளிவற்றுக் குழம்பியதாகவே இருக்கிறது.
எனதுடலே எனக்குப் பாரமாயிற்று.

20.05.2009

ஆழத்திலிருந்து உன்னைப் பிரித்தல்எனது மெய்ப்பிக்கப்படாத அனைத்துலக
கனவுப் பொழுதுகளையும்
நீயே இன்னமும் அபகரிக்கிறாய்.

அனைத்திலும் நானாகி
அதிசயிக்கத்தக்க வழிகளிலெல்லாம் என்னை
உன் மெய்ப் பொருளாய் பாறென்ற உன்
கட்டளைகளிற்கு என்னதாயிற்று என்றேன்.
கனவுகளின் மீதேறி
உனக்கான பெரும் இடத்தினை பறித்து
என்னையே என்னுடன் இணைக்கும் பயணத்தில்
நான் தோற்று நின்றேன்.

உன்னுடனான நாட்களில் எழுந்த கவிதைகளும் எழுத்தும் இசையும்
இன்றென் வலிகளின் நீட்சிப் பிழம்பாய்க் கிடக்கிறது.

சிதைந்த ஐன்னலின் வழியாய்
என் அனைத்துலகப் பொழுதுகளின் ஆரம்பமும் முடிவும்
சில நினைவுகளைத் தள்ளிவிட்டு
முன்னகரும் முயற்சிகள் இடையிடையே பறிபோயின.
வலிகளில் பிய்த்து எடுக்கப்பட்ட என்னிடத்தில்
எதிலும் பிடிப்பற்ற வெறும் காற்றும்
அமரத் தகுதியில்லை என்று துப்பியது.

கடந்து செல்லும் நாட்களின் முன்தைய பொழுதுகளிலிருந்து
ஒவ்வொரு இரவுகளிலும் பகலிலும் முழுதாய்
உன்னையும் உன்னோடிருந்த என்னையும் விட்டகன்று
காற்று குடிகொள்ளும் அங்கமெல்லாம்
என்னைத் தனியாய்ப் பரப்பிக் கொள்கிறேன்.

இனியாவது என் அனைத்துலகக் கனவுகள் மெய்ப்பிக்கப்பட
எனக்குள்ளிருக்கும் உன்னையும் என்னையும்
''கலைத்து முடிந்து விட்டது'' என்றது மனம்.

30.05.2009

Friday, April 3, 2009

தம்பிப் போடியாரும் அவர் தோழர்கள் மூவர் பற்றியுமான 16.10.2008ன் குறிப்பு


புவியீர்ப்பு விசையின் எல்லைகளிற்கு அப்பால்
என்னிடமிருந்து மறைந்து போன
காற்றின் கூறுகளினை அடைத்துக் கொண்டிருந்தேன்.

வானவெளியின் பெரு நதி
மூங்கில் மலையோரமாய் சலங்கை கட்டி
மௌனமாய் ஓடிக்கொண்டிருக்கும் வாசனை கிட்டியது.

அந்தப் பரந்த வெளியெங்கும்
குருதி மணமும் இறுதி சுவாசமும்
புதிய சூரிய ஒளிக்கற்றைகளோடு பரவி
காற்றின் மூலக்கூற்றின் வெளியெங்கும்
வன்முறையின் செய்திகளினைச் சொல்லியது.

வராமலே போய்க் கொண்டிருந்த
எனக்குரிய காலச் சந்தர்ப்பத்தின் இடுக்கினுள்
இன்னும் மறந்திட முடியாத வலியின் தொடராய்
மற்றொன்றான காலையில்
தம்பிப் போடியாரும் அவர் தோழர் மூவரும்
குருதி மணமும் இறுதி சுவாசமுமாய் இனி வர முடியாததுவாய்
என்னைக் கடந்து போயினர்.

தடுத்திட முடியாத வேகமாய் அவர்கள் பரவ
புவியிலிருந்து வன்மமாய் அவர்கள் பிரிக்கப்பட்ட
கொக்குலுவ - பொத்தானை நோக்கி நான் வந்திறங்கினேன்.

நான்கு மோட்டார் சைக்கிள்களில்
எட்டுப் பேர் மறைந்தவுடன் திரும்பிய என் பார்வையில்
சுவாசமிழந்த நான்கு உடல்கள் தட்டுப்பட்டு இடறி நின்றன.

பின்னொரு நாளின் நினைவாயும்
கத்தத்திற்கான ஒரு நாட்குறிப்பாகவும்
கடந்து சென்றது அற்பமாய் இச்செய்தியும் வலியும்.

உசாத்துனைக் குறிப்புக்கள்:


தம்பிப் போடியார் - அக்கரைப்பற்றுப் பிரதேச பிரிவில் முதலாம் குறிச்சியில் வசித்தவர். ஐந்து ஆண்கள் ஒரு பெண்னின் தகப்பன். ஒரு விவசாயியாகவே வாழ்ந்து விவசாயியாகவே 16.10.2008ல் படுகொலை செய்யப்பட்டவர்.

அவர் தோழர்கள் மூவர் - தம்பிப் போடியாருடன் விவசாயத்திற்காய் அதிகாலையில் அவர்களிற்கு சொந்தமான வயல்வெளிகளிற்கு சென்ற போது தமிழ் தீவிரவாத குழுவினால், குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.

கொக்குலுவ - பொத்தானை முஸ்லிம்கள் பரமபரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் வயல் வெளிகளில் ஒரு பிரதேசம்.


நன்றி: பெருவெளி 06

சங்கமித்தையும் என் நிழலின் நிறமும் - காற்றின் உரையும்


நிறுத்தவியலாத வரலாறாய் என் நிழல்
இத்தேசமெங்கும் வியாபித்திருந்த போது
பொழுதுகள் உருமாறிக் கொண்டிருந்த காலவெளி நீண்டு அகன்றிருந்தது.
எனக்கிருக்கும் நிழல்களின் நிறத்தடம்
யாரும் பெயர் மாற்றம் பற்றிக் கூறமுடியாது என்றனர் பறவைகள்.

வெள்ளரசங்கிளையுடன் தான் வந்திறங்கிய இடம்
அடிக்கடி மாறிக் கொண்டே வருமென்பது பற்றி,
சகோதரி சங்கமித்தையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும்,
சங்கமித்தை கொண்டுவந்த அரச மரத்தின் கிளை
இனத்தின் அடையாளமாய் மாறி தேசமெங்கும் பரப்பப்பட்டது.
அல்லது,
ராட்சத எந்திரங்கள் மூலம்
குடியேற்றத்திட்டங்களின் முன் வாயல்களில்
இரவேடுடிரவாக நடப்பட்ட போது
அதற்கான பாதுகாப்பும் பொதுச்செலவில் கொடுக்கப்பட்டது மேலதிக செய்தி.

என் மதிப்புக்குரிய புத்தபிரானை ஞானமடையச் செய்த
அரச மரத்தின் கீழ்,
நானும் ஞானவொளி வேண்டி இதமான காலையிலும் மாலையிலும் இருந்தேன்.
உயிரின் அன்பு பற்றி
உலகின் ஒழுங்கில் பாடப்புத்தகமாக்கப்பட்ட என் புத்த பிரான்
ஆயுதவெளிக்குள் அகப்பட்டுக் கொண்டதால்
எனக்கான ஞானம் பற்றியவர் அறிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.

என் எலும்பின் மச்சைகளினை பொசுக்கி
அதன் கரும்புகையும் வாசமும்
வெள்ளரச மரத்தின் குளிர் தோய்க்க
பெரிய பீப்பாய்களில் அடைக்கப்பட்டது.

இன்னும் மறந்திட முடியாத வலியின் நீண்ட தொடராய்
மற்றொரு செய்திகளும் வந்து கொண்டேயிருந்தது.

வாழ்வின் அர்த்தங்கள் அழித்தும் சூறையாடியும் ஏப்பம் விடப்பட்ட பொழுதுகள்
மற்றோர் அறிவுகளினால் பெயர்க்கப்பட்டு எம்மறிவாய் நிரப்பப்பட்டன.
அல்லது,
எம் வாழ்வு பிடுங்கப்பட்டு
சூனியக் குகைகளின் மொழியில் புதியதொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

வடிவங்களும் கட்டமைப்பும் நிலை நிறுத்தப்பட்டு அங்கீகாரமாய் மாறிய வேளைகளில்
என் நிழலின் அடையாளம் வீணாயும் இழிவாயும் கூறப்பட்டது.
அறிவு என் பக்கமிருந்து வளர்ந்து விடாத படி
பொது அறிவுகள் எம்மை விட்டு வேறொன்றாய் எழுதப்பட்ட போது,
நாங்கள் தளம் பிரிக்கப்பட்டிருந்தோம்.
மறைக்கப்பட்ட அறிவிலும் வரலாற்றிலும் எனது விலாசம் எழுதப்பட்டிருந்ததை
மற்றைய அறிவுகள் மட்டுமே அறிந்திருந்தன.
அல்லது,
அவையறிந்து இருந்ததினால் இவற்றை மறைத்துக் கொண்டிருந்தன.

விரிந்து பகிர்ந்திருந்தது என் நிழலும் அதன் நிறமும் அனைவருக்கும்.

நன்றி: பெருவெளி 06

Wednesday, December 10, 2008

குளிர் அருந்தப்பட்ட இரவின் கதை


அர்த்தங்களற்ற அனைத்து வார்த்தைகளையும்
மீளவும் நீ வாசித்தாய்.
துளிர் காய்ந்திந்த கிளைகளின் அரும்புகளை
கொஞ்சம் கொஞ்சமாய் வருடி
மீண்டும் புது அர்த்தங்களை அவை செதுக்கி விளையாடின.

மையளின்றி என்னில் ஊர்ந்து திரியும்
உன் நினைவுகளின் ஒவ்வொரு சுவடும்
என்னிலுன்னை இறுகவே வைத்திருக்குமாறு
காலம் பல தாண்டி ஆணையிட்டது. 

தூரத்தே நின்ற அனைத்து நிம்மதிகளும்
ஒரு எட்டுக்குள் வருமினியென
உன் தொடுகைகளின் அரசியல் சொல்லிட்டு.
மிக அற்புதமாய் ஒவ்வொரு சொல்லாய்
என் காதின் பின்னிருந்து நீ மொழிந்த போது
சொற்களின் ஓவியம் மெல்லிய நிறங்களினால் வரையப்பெற்றது. 

உடைந்த ஒளிகள் மறைந்து கொண்ட இரவுகளின்
விடியும் அனைத்துப் பொழுதுகளையும்
இருவரும் இணைந்து சொந்தமாக்கிக் கொண்டோம் என
நீ கூறிய போதெல்லாம்
என் சுவர்க்கடிகாரம் தன் விழிகளின் வலியுணரும்.

ஒவ்வொன்றாய் மாறிமாறி நெஞ்சங்களில் ஊர்ந்துவிட்டு
கொஞ்சம் ஓய்வெடுத்து மீளவும் பேசிக்கொண்டிருந்த போது
பொழுதுகள் மெதுமெதுவாக மறைந்து
வேகமாய்ப் புலர்ந்தன மற்றைய நாள்.  

கனவுகளைக் கோர்க்க முடியாமலே
இரவுகள் அனைத்தும் பகல்களாகிப் போகின்றன.
கூசாமல் எழும்பும் உன் தேம்பல்களில் நாட்களினை முடிச்சிட்டு
சந்திப்புக்களற்ற பொழுதுகளை வரமாக்கிக் கொண்டோம்.

போர்வை களற்றிய உடலோடு
இரவுகளின் அனைத்துக் குளிர்மையையும் உன் ஜன்னலோரமாய்
வெகு இலகுவாக நீ அருந்தப் பழகிக்கொண்டாய்.  

இனியென்ன,
நீ காட்டித்தந்த வாழ்வின் அனைத்து ரிதங்களையும்
ஒரு மலையின் கணதியுடன்
இயல்பாகவே சுமக்கப் பழகிக் கொண்டேன்.
குவிந்துள்ள நம்மனைத்து உறவு
வானமெங்கும் தமது பங்கினை பெற்றுக் கொள்ளும்.

10.12.2008

Monday, August 25, 2008

மரணத்தின் செய்தி

மயிரில் புதைந்திருந்த
அதே கோடுகள் விழுந்த முகம்
நினைவுகள் அழிந்திடாமல் கிடந்தது.

மிச்சமிருந்த சில்லறைகளை
நானே பொறுக்கி எடுத்திருந்தேன்.

வறுமையின் துணையுடன்
கை நீட்டி நின்ற அவரில்
ஒட்டியிருந்தது அண்மைக்கான மௌத்தின் செய்தி.

நண்பகல் முழுமையாய் சாய்ந்து
வான் திரை விலகிக் கிடந்த பகல்.

திமிரால் விட்டுச் சென்ற உணவுகள்
மௌத்திற்கு முன் விரும்பி உண்ணப்பட்டன.

என் மனிதம் அப்போதும்
உறங்கிக் கொண்டேயிருந்தது.

21.08.2008

மனதில் நிறைதல்

மிகத் தொலைவான
அதிகாலை பற்றிய நம்பிக்கைகள்
தாளிடப்பட்ட நினைவுகளோடு அடங்கியது.

நான் வரைந்து வரைந்து
எனக்குள்ளே புதைத்துக் கொண்ட
சித்திரங்கள்/ஓவியங்கள்/வாழ்க்கை
வெற்று இரவுகளின் கனவுகளை பரிசளித்தன.

வராதயென் பல்நிறக் கனவுகளின் பின்
ஒற்றை நிறக் கனவுகளின் அச்சம்
முழுமையாய் என்னில் அடர்ந்திற்று.

சரிந்து கிடக்கும் புருவங்களின் கதையாய்
மூட்டைகட்டப்பட்டன.

அச்சமிகுந்த வாழ்வு
அதே வாழ்வாய்ப் பழகிப்போனது.

09.08.2008

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..