இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Monday, August 25, 2008

மரணத்தின் செய்தி

மயிரில் புதைந்திருந்த
அதே கோடுகள் விழுந்த முகம்
நினைவுகள் அழிந்திடாமல் கிடந்தது.

மிச்சமிருந்த சில்லறைகளை
நானே பொறுக்கி எடுத்திருந்தேன்.

வறுமையின் துணையுடன்
கை நீட்டி நின்ற அவரில்
ஒட்டியிருந்தது அண்மைக்கான மௌத்தின் செய்தி.

நண்பகல் முழுமையாய் சாய்ந்து
வான் திரை விலகிக் கிடந்த பகல்.

திமிரால் விட்டுச் சென்ற உணவுகள்
மௌத்திற்கு முன் விரும்பி உண்ணப்பட்டன.

என் மனிதம் அப்போதும்
உறங்கிக் கொண்டேயிருந்தது.

21.08.2008

மனதில் நிறைதல்

மிகத் தொலைவான
அதிகாலை பற்றிய நம்பிக்கைகள்
தாளிடப்பட்ட நினைவுகளோடு அடங்கியது.

நான் வரைந்து வரைந்து
எனக்குள்ளே புதைத்துக் கொண்ட
சித்திரங்கள்/ஓவியங்கள்/வாழ்க்கை
வெற்று இரவுகளின் கனவுகளை பரிசளித்தன.

வராதயென் பல்நிறக் கனவுகளின் பின்
ஒற்றை நிறக் கனவுகளின் அச்சம்
முழுமையாய் என்னில் அடர்ந்திற்று.

சரிந்து கிடக்கும் புருவங்களின் கதையாய்
மூட்டைகட்டப்பட்டன.

அச்சமிகுந்த வாழ்வு
அதே வாழ்வாய்ப் பழகிப்போனது.

09.08.2008

நிழலாய் தொடர்கிறது


வெயில் மறைந்தும்
மறைந்து விடவோ விட்டு விலகிடவோ
இயலாமல் போயிட்டு.

நினைப்பதற்கு முன்னமே
இடைவெளி தந்திடாமல்
அனைத்திலும் ஏறி உட்கார்ந்து கொள்ளும்.

மழை
சாரளாக விழுந்த போதுதான்
கப்பலினை கரையில் விட்டேன்.

கரையும் சுக்கு நூராகுமளவு
மழை கொட்டிட்டு.

10.07.2008

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..