இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Friday, April 3, 2009

சங்கமித்தையும் என் நிழலின் நிறமும் - காற்றின் உரையும்


நிறுத்தவியலாத வரலாறாய் என் நிழல்
இத்தேசமெங்கும் வியாபித்திருந்த போது
பொழுதுகள் உருமாறிக் கொண்டிருந்த காலவெளி நீண்டு அகன்றிருந்தது.
எனக்கிருக்கும் நிழல்களின் நிறத்தடம்
யாரும் பெயர் மாற்றம் பற்றிக் கூறமுடியாது என்றனர் பறவைகள்.

வெள்ளரசங்கிளையுடன் தான் வந்திறங்கிய இடம்
அடிக்கடி மாறிக் கொண்டே வருமென்பது பற்றி,
சகோதரி சங்கமித்தையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும்,
சங்கமித்தை கொண்டுவந்த அரச மரத்தின் கிளை
இனத்தின் அடையாளமாய் மாறி தேசமெங்கும் பரப்பப்பட்டது.
அல்லது,
ராட்சத எந்திரங்கள் மூலம்
குடியேற்றத்திட்டங்களின் முன் வாயல்களில்
இரவேடுடிரவாக நடப்பட்ட போது
அதற்கான பாதுகாப்பும் பொதுச்செலவில் கொடுக்கப்பட்டது மேலதிக செய்தி.

என் மதிப்புக்குரிய புத்தபிரானை ஞானமடையச் செய்த
அரச மரத்தின் கீழ்,
நானும் ஞானவொளி வேண்டி இதமான காலையிலும் மாலையிலும் இருந்தேன்.
உயிரின் அன்பு பற்றி
உலகின் ஒழுங்கில் பாடப்புத்தகமாக்கப்பட்ட என் புத்த பிரான்
ஆயுதவெளிக்குள் அகப்பட்டுக் கொண்டதால்
எனக்கான ஞானம் பற்றியவர் அறிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை.

என் எலும்பின் மச்சைகளினை பொசுக்கி
அதன் கரும்புகையும் வாசமும்
வெள்ளரச மரத்தின் குளிர் தோய்க்க
பெரிய பீப்பாய்களில் அடைக்கப்பட்டது.

இன்னும் மறந்திட முடியாத வலியின் நீண்ட தொடராய்
மற்றொரு செய்திகளும் வந்து கொண்டேயிருந்தது.

வாழ்வின் அர்த்தங்கள் அழித்தும் சூறையாடியும் ஏப்பம் விடப்பட்ட பொழுதுகள்
மற்றோர் அறிவுகளினால் பெயர்க்கப்பட்டு எம்மறிவாய் நிரப்பப்பட்டன.
அல்லது,
எம் வாழ்வு பிடுங்கப்பட்டு
சூனியக் குகைகளின் மொழியில் புதியதொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

வடிவங்களும் கட்டமைப்பும் நிலை நிறுத்தப்பட்டு அங்கீகாரமாய் மாறிய வேளைகளில்
என் நிழலின் அடையாளம் வீணாயும் இழிவாயும் கூறப்பட்டது.
அறிவு என் பக்கமிருந்து வளர்ந்து விடாத படி
பொது அறிவுகள் எம்மை விட்டு வேறொன்றாய் எழுதப்பட்ட போது,
நாங்கள் தளம் பிரிக்கப்பட்டிருந்தோம்.
மறைக்கப்பட்ட அறிவிலும் வரலாற்றிலும் எனது விலாசம் எழுதப்பட்டிருந்ததை
மற்றைய அறிவுகள் மட்டுமே அறிந்திருந்தன.
அல்லது,
அவையறிந்து இருந்ததினால் இவற்றை மறைத்துக் கொண்டிருந்தன.

விரிந்து பகிர்ந்திருந்தது என் நிழலும் அதன் நிறமும் அனைவருக்கும்.

நன்றி: பெருவெளி 06

No comments:

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..