
இத்தளம் பற்றி..
Wednesday, December 10, 2008
குளிர் அருந்தப்பட்ட இரவின் கதை

Monday, August 25, 2008
மரணத்தின் செய்தி

அதே கோடுகள் விழுந்த முகம்
நினைவுகள் அழிந்திடாமல் கிடந்தது.
மிச்சமிருந்த சில்லறைகளை
நானே பொறுக்கி எடுத்திருந்தேன்.
வறுமையின் துணையுடன்
கை நீட்டி நின்ற அவரில்
ஒட்டியிருந்தது அண்மைக்கான மௌத்தின் செய்தி.
நண்பகல் முழுமையாய் சாய்ந்து
வான் திரை விலகிக் கிடந்த பகல்.
திமிரால் விட்டுச் சென்ற உணவுகள்
மௌத்திற்கு முன் விரும்பி உண்ணப்பட்டன.
என் மனிதம் அப்போதும்
உறங்கிக் கொண்டேயிருந்தது.
21.08.2008
மனதில் நிறைதல்

அதிகாலை பற்றிய நம்பிக்கைகள்
தாளிடப்பட்ட நினைவுகளோடு அடங்கியது.
நான் வரைந்து வரைந்து
எனக்குள்ளே புதைத்துக் கொண்ட
சித்திரங்கள்/ஓவியங்கள்/வாழ்க்கை
வெற்று இரவுகளின் கனவுகளை பரிசளித்தன.
வராதயென் பல்நிறக் கனவுகளின் பின்
ஒற்றை நிறக் கனவுகளின் அச்சம்
முழுமையாய் என்னில் அடர்ந்திற்று.
சரிந்து கிடக்கும் புருவங்களின் கதையாய்
மூட்டைகட்டப்பட்டன.
அச்சமிகுந்த வாழ்வு
அதே வாழ்வாய்ப் பழகிப்போனது.
09.08.2008
நிழலாய் தொடர்கிறது
Friday, August 1, 2008
இரண்டு தடவைகள் வாழ்கிறாய்

அனைத்து சலனங்களினையும் அடக்கி
என் மூச்சைத் திருடி
நீ அதிர்வுகளோடு எழுந்து போனாய்.
உன் ஆளுமையும் அதிரவைக்கும் விம்பல்களும்
உருக்குலைய வைத்து
என்னை சாகடித்துக் கொண்டே இருக்கிறது.
என்னை விட உன் மகிழ்விற்கே இவையெல்லாமென
பல கோடி தடவை கெஞ்சினேன்.
உன்னிலைகளே அனைத்தும் என்ற கனவுகள்
என் உடலின் இரு அந்தங்களிலும்
மீசான் கட்டைகளை செருகி விட்டது.
உன் பிடிவாதங்கள் நிறைந்த உலகில்
நீ இட்டுள்ள உறுதியான உனது நிலைகளில்
என்னையும் ஓடவிட்டு
நீ வாழ்வதை பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
இரண்டு தடவைகள் வாழ்கிறாய்.
கொலைகளின் தேசத்தில் பிறந்தேன்.
எனது இரவுகளை
தூக்கமென்ற அடர்ந்த உலகினுள் புதைக்காமலும்
எனது பகல்களை
சோம்பலேறிப்போன வேலைத்தளத்தினுள்
அடமானம் வைக்காமலும்
எனது இன்றைய நாட்கள் நகர்கின்றன.
ஒவ்வொரு நிமிடமும்
புதிர்களும் வினாக்களும் நிறம்பிய உலகமும்,
என்னில் விழுந்து விழுந்து எழும்புகிறது.
இராட்சத விலங்கொன்று விழுங்கிற்று.
சமாதானம் பேசச்சென்று
வெட்டுண்டு விட்டதன் செய்திகளே
காலை அழைப்பாக தொலைபேசியில்.
விரல்களைப் பொத்தி கைக்குள் வைத்து
உன்னைக் கேட்கிறேன்.
நாட்கள் மெலிந்தன

அனைவரும் போல நீயுமானாய்.
பகல்களை சூரியனிடமிருந்து பிடுங்கி
அனைத்தினையும் இருளாக்கிடும் விடயமாய்
நான் இதை நினைத்திருக்கவில்லை.
என்னிலைகளை புரிந்து கொண்டு
காலமெல்லாம் நீ பேசிய அனைத்தையும்
மறந்து
உன்னிலை காப்பிற்காய்
துக்கியெறிந்து முகம் மாற்றி
நீண்ட வெளியில் எதுவுமற்று என்னை
உன்னால் நிரப்பிவிட்டு சென்றாய்.
நீயும் உன் நினைவுகளும்
குளிர் காலத்து உன் சிறகுகளும் போதும்.
என்னை முந்தியடித்து
உன்னோடு எனக்குள் வாழ்வேன்.
காறித் துப்பி எழும்புவோம்

அறிவாக நினைத்ததெல்லாம்
மையத்துக்களை விருந்தாகத் தந்தது.
என்னை நிறப்பி ஒட்டி சீர்செய்யும் உன்
அனைத்து கைங்காரியங்களும் சிதறிப்போயின.
நீ கேட்டதெல்லாம்
உன்னை அதிகாரப்படுத்தியே.
உன்னை ஒதுக்கிவைத்து விட்டு
எந்த அறிவினையும் நாங்கள் பெற்றிடாத படி
நீ
எங்களில் உன்னை
உறுதியாய் வார்த்திருக்கிறாய்.
நாங்களிழந்த கால்களினாலே
உன்னை எட்டியுதைத்து
உன் மொத்த இருப்பின் மீதும்
காறித் துப்பி
நாங்கள் திடமாய் எழும்பிவோம்.
என் தேசத்தின் அனைத்திற்குமாய்
எங்களிலிருந்து நாங்கள் எழும்புவோம்.
இன்னுமொருவனும் கற்பழித்தான்

எந்த தாட்சன்யமுமின்றி
நான் மீளவும் வல்லுறவுக்குள்ளானேன்.
கேவலத்தால் கசிந்து கிடந்தயென்
கருப்பைக்குச் சொந்தமான குருதியின் சாட்சியாய்
நான் மீளமீள கற்பழிக்கப்பட்டேன்.
ஆயிரம் திசைகளாய் என்னையிழுத்து
அவரவர் விருப்பம் போல்
அக்குள் தொடக்கம் அனைத்தும் வரை
வெறிபிடித்த நாயின் வேகத்தில் குதறித்தள்ளினர்.
நான் பெத்துப் போட்ட பிள்ளைக்கூட்டம்
வாய்பொத்தி சுத்தி நிற்க
என்னை சிதிலமாக்குவதில் அவர்கள் குறியாகினர்.
இடைவேளையின்றி
காபிர்களே படுத்தெழும்பிய என்னில்
சுன்னத் செய்யப்பட்ட கயவனும்
தாரளமாய் விழுந்தெழும்பினான்.
இறுதியாய் இன்று பகலும்,
அகிம்சா தர்மத்தின் போர்வையும்
என்னைக் குதறியெடுக்க மன்றில் நிற்கிறது.
வாய்பொத்தி சுத்தி நிற்க
என்னை சிதிலமாக்குவதில் அவர்கள் குறியாகினர்.
அன்றைய மழைக்கு நிறமிருந்த மாலைப்பொழுது

கொஞ்சம் கொஞ்சமாக கால் பதித்து
என் வண்ணாத்திகளின் நிழலில் பிரயாணப்பட்டேன்.
மெல்லிய நீலமாய் அகன்று இருந்தது.
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்
ஒரு கரையில் அதுவிட்ட நுரையில்
ஒரு சோடி வண்ணாத்திகளின் நீலநிழல் அழகாய் படர்ந்தது.
வண்ணாத்திகள் ஓய்விற்காய் ஒதுங்கிய பொழுதன்று
மழைக்கு சொந்தமாய் விதிக்கப்பட்டது.
நீண்டு பயணிக்க விதிக்கப்படுகையில்
ஒரு சோடி வண்ணாத்திகள் மட்டும்
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்
நீல நிழலின் அழகில் நின்றது.
உறுதியாய் நிலைக்குமாறு இறைவனின் விதியமைக்கப்பட்டது.
கறுப்பின் வர்ணங்களிற்கு கூடிய ஆசனங்கள்.
ஓய்வுப்பொழுது மழைக்கு விதிக்கப்பட்டது
சிறிய கடலின் நீண்ட வெளியில்
என் ஒரு சோடி வண்ணாத்திகளின் ரூஹ{
பெருவெளி இதழ் 05
உனதும் எனதும் உறவும் பிரிவும் பற்றிய பாடல்
எனக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில்
நீ உன் பெருங்கவிதையினை வாசித்தாய்.
அன்றைய பொழுதின் வேகத்தினையும் விட உன் கவிதைச் சொற்களின்
கூர்மையாக்கப்பட்ட வேகம் மிகவும் வலுத்திருந்தது.
உன் பெருங்கவிதையின் ஒவ்வொரு உச்சரிப்பின் பின்னும்
நான் அதற்கென அரசியல் கண்டுபிடித்தேன்.
உன் பெருங்கவிதைக்குள்ளே உணர்ச்சி, சுயம், ஆழம், தூய்மையென
அனைத்து மனிதமும் நிறைவாய் இருந்தது.
நீ மிக உயர்ந்த இடங்களில் எழுந்து நின்று
~என் கவிதைகள் நமக்கே| யென உரத்த குரலில்
என்னை அரவணைத்துக்கொண்டு முழங்கினாய்.
உன் கவிதை எனக்கும் இனித்தது
உன் கவிதை எனக்கும் உறைத்தது
உன் கவிதை எனக்கும் உயிரானது
உன் கவிதை எனக்கும் பலமானது
உன் கவிதை எனக்கும் வலுத்தது
உன் கவிதை எனக்கும் எனக்கானது
உன் கவிதை என்னையும் எழுப்பியது
நீ உன் கவிதையில் அன்பை விதைத்து நாமொன்று என்றாய்
நமது இனங்களின் தொடக்கங்களை இணைத்தாய்
நமது குடிப்பரம்பலை நிறுவினாய்
நாம் இறைவனால் இணைக்கப்பட்டோமென்றாய்
நம்மை பிரித்துவிட்டார்களென்றாய்
நாம் இணைந்து கொள்வோமென்றாய்
நமக்கென நிலம் வேண்டுமென்றாய்
நமக்கென புதிய வரலாற்றினை எழுதினாய்.
நான் உன் கவிதையினை புரிந்துகொண்டேன்
அப்போதெல்லாம் நீயும் என்னை அரவணைத்தாய்
உன்னுடன் உறவாடுவது என்னை எனக்குப்பிடித்ததினை விட பிடித்துப்போனது
மகத்தான ஆரம்பங்களுடன் நம்பயணம் தொடங்கிற்று.
உன் கவிதைக்குள் என்னையறியாமலே நான் புதைக்கப்பட்டேன்.
நீயும் உன் கவிதையும் எனக்கும் என நீ கூறியதால்
உன் பெருங்கவிதையெனக்கு பலமென நம்பி
இறுதியில் உனக்குள்ளும் உன் கவிதைக்குள்ளும் சரணாகதியானேன்.
நீ எழுதிய வரலாற்றில் காலம் ஓடியது
உன் பெருநில கவிதையின் சொற்கள் மாறின
உன் நிகழ்ச்சி நிரல்கள் எங்கோ நிர்ணயிக்கப்பட்டன
உனக்குள் இருந்த ஆரம்பங்கள் தொலைந்தன.
எனக்கும் உனக்குமான காதலால்
நீ பலமடைந்த பொழுதுகளை மறந்தாய்
திடிரென என்னையும் நம் காதலையும் நிராகரித்தாய்
உன்னையே நம்பிய பாவத்திற்காய்
முஸல்லாவிலே பலிக்கடாவாக்கினாய்
எனது அறிவகங்களின் கற்பை அழித்தாய்
பாங்கிற்காய் உயர்ந்த குரல்களை அறுத்தாய்
நிர்வாணமாக்கி என் நிலத்திலிருந்தே துரத்தி
நடுத்தெருவிலும் அடர்ந்த காட்டிலும் விரட்டி விரட்டியடித்தாய்.
உன் அன்பின் பின்னரசியல்
இவ்வளவு வக்கிரமென நான் நம்பியிருக்கவில்லை.
நீயடித்த அடியில் என் காதல் போதை கலங்கியது
நானும் நீயும் வேறென அறிந்தேன்.
தேடிப்பார்த்த போது
உனக்குமெனக்கும் வெகு தூரம்.
நீ காட்டிய காதல் பொய்
நீ கூறிய உலகம் பச்சப்பொய்
நீ நிறுவிய அனைத்தும் பொய்
நீயெழுதிய வரலாற்றில் பொய் மாத்திரமே உண்மை.
என் வலிகள் என்னைத்தேடியலைந்தன...
நீ வேறு நான் வேறு
எனதும் உனதும் மொழிகள் வேறு
எனதும் உனதும் பொழுதுகள் வேறு
எனதும் உனதும் சூரியனும் சந்திரனும் வேறு
எனதும் உனதும் நாட்களும் நிமிடங்களும் வேறு
எனதும் உனதும் கவிதைகளும் பாடல்களும் வேறு
எனதும் உனதும் மொத்தமும் வேறு வேறு.
நீ விரட்டும் போது உனக்கு நான் வேறு
அதை நான் கூறும் போது
உன் வன்முறையெனக்கு மீது.
நிச்சயமாக,
எனதும் உனதும் அனைத்தும் வேறு
நம் நன்றிகள் கூட வேறு
நமது கவிதையும் பாடலும் வேறு வேறு என்பது போல.
இடைமறிக்கும் உயர்ந்த கோஷங்கள்

மீண்டும்,
பச்சை மஞ்சள் நீலம் சிவப்பு வெள்ளை என்பனவும்
ஆயிரம் பாகமாய்ப் பிரிந்த நிறங்களும்
அவற்றின் இணையாத கலவைகளும்
பொலீதீன்களோடு இணைந்து கொடிகளாயிற்று.
தலைவர் வருவாராம்
உயர்த கோஷங்களெல்லாம் இடைமறிக்கும்
உணர்சிகள் வீதிகளில் நடமாடும்
மாடு தின்பதற்காய் மதில்களில் போஸ்டர்கள் இருக்கும்.
மிகத்தூரத்தில் அதுவும் வானத்திலிருந்து
மறைந்தவர் கவனிப்பதாய் ஒரு அலங்காரம்
பாவம்,
அவர்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள்
எல்லாம் மறந்து தனித்துவத்திற்காய் நாமெல்லாம்
உச்ச ஸ்தாயியில் கோஷம் முழங்குவம்.
மீளவும்
மிக இருட்டிய இரவுகளில்
கருமை மேலெழுகிறது விடியலிற்காய்.
2003.07.03
Comments
எனது வலைத்தளமும் நானும்
- Farzan.ar
- இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..
01. கால் நூற்றாண்டுக்கு மேலாக
நமது பகல்கள் இப்படித்தானே
பர்ஸான்
"மீளவும்
மிக இருட்டிய இரவுகளில்
கருமை மேலெழுகிறது விடியலிற்காய்"
02. நமது அரசியல் உணர்வு முட்டாள்தனமாய் மட்டுமல்ல அப்பாவித்தனமானதாகவும் ஆக்கப்பட்டிருப்பதை இவ்வரிகள் சொல்வது போலிருக்கிறது எனக்கு..
"மிகத்தூரத்தில் அதுவும் வானத்திலிருந்து
மறைந்தவர் கவனிப்பதாய் ஒரு அலங்காரம்
பாவம்,"
03. வலுவற்ற அரசியல் கொண்ட ஒரு சமுகத்தின் சோகக் கவிதை இது
04. வேறென்ன சொல்வது...?
(சும்மா -நல்ல கவிதை- என்றுவிடுவது என்னை மீறிய வெற்று மதிப்பீடாகிவிடுமோ என்று பயமாகவும் இருக்கிறது)