இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Friday, August 1, 2008

இரண்டு தடவைகள் வாழ்கிறாய்


அனைத்து சலனங்களினையும் அடக்கி
என் மூச்சைத் திருடி
நீ அதிர்வுகளோடு எழுந்து போனாய்.

இப்படியிருக்காது என்ற என் ஆசைகள் மீது
உன் ஆளுமையும் அதிரவைக்கும் விம்பல்களும்
உருக்குலைய வைத்து
என்னை சாகடித்துக் கொண்டே இருக்கிறது.

உன்னை முதலினைப்படுத்தி
என்னை விட உன் மகிழ்விற்கே இவையெல்லாமென
பல கோடி தடவை கெஞ்சினேன்.

உன் அசட்டுக் காதுகளும்
உன்னிலைகளே அனைத்தும் என்ற கனவுகள்
என் உடலின் இரு அந்தங்களிலும்
மீசான் கட்டைகளை செருகி விட்டது.

எனக்கேயான எனது அனைத்தினையும் மறுத்தாய்.
உன் பிடிவாதங்கள் நிறைந்த உலகில்
நீ இட்டுள்ள உறுதியான உனது நிலைகளில்
என்னையும் ஓடவிட்டு
நீ வாழ்வதை பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

நீ உலகில்
இரண்டு தடவைகள் வாழ்கிறாய்.

09.06.2008

No comments:

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..